#1502 to #1506

#1502. தாச மார்க்கம்

எளியனல் தீபம் இடல், மலர் கொய்தல்
அளிதின் மெழுகல், அது தூர்த்தல், வாழ்த்தல்,
பளிமணி பற்றல், பல்மஞ் சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

தொண்டு நெறி என்பது செய்வதற்கு எளிதான சிறிய பணிகளைச் செய்வது ஆகும். ஆலயத்தில் தீபம் ஏற்றுவது, மலர்களைக் கொய்வது, ஆலயத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்வது, ஆலயத்தை மெழுகுவது , இறைவனை வாழ்த்துவது , பூசை நேரத்தில் மணி அடிப்பது, திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு வந்து தருவது போன்ற எளிய திருப்பணிகள் செய்வதே தாச மார்க்கம் எனப்படும் தொண்டுகள் செய்யும் நன்னெறி ஆகும்.

#1503. நம் வேந்தனை நாடுவீர்.

அது, இது ஆதிப்பரம் என்று அகல்வர்,
இதுவழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை,
விதிவழியே சென்று வேந்தனை நாடும்
அது விது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.

ஆதிப் பரம் பொருள் அதுவோ இதுவோ என்று ஐயம் கொண்டவர்கள் துணிவும் உறுதியும் இன்றி மனம் மயங்குவர். “இதுவே பரம் பொருள் . இதனை வழிபடுவதே சிறந்தது!” என்று உறுதியாக வழிபடுபவர் எங்கும் இல்லை! உங்கள் விதி வழிப்படி உங்களுக்கு எந்த இறைவனிடம் பற்று உள்ளதோ அவனையே சென்று வணங்குவீர். பரம் பொருள் அதுவோ இதுவோ என்ற ஐயங்களைப் போக்கும் வழி இது ஒன்றே ஆகும்.

#1504. அரன் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன்!

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பான் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பர் வானவர் தேவனை நாள் தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே.

திங்களால் உண்டாகின்ற தாழ்ந்த உணர்வுகளை நான் முயன்று அடக்குவேன். அதன் பின்னர் அறிவினால் நிகழும் உயர்ந்த ஆராய்ச்சிகள். ஆராய்ச்சிகளின் பயனாக நான் திடமான ஞானம் பெறுவேன். எங்கும் நிறைந்துள்ள அரன் திருவடிகளை இடையறாது எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பேன். அந்த
தேவதேவனை நான் வணங்குவேன். இந்த விதமான் வழிபாட்டினால் எல்லா வழிபாடுகளும் ஒரு முடிவில் பொருந்தும் நிலை ஏற்படும்.

#1505. தொழுதால் வழுத்துவான்!

அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர், உள் மகிழ்ந்து, உள் நின்று அடித் தொழக்
கண் அவன் என்று கருது மவர்கட்க்கு ,
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

ஆயிரம் திருப் பெயர்களை சொல்லித் தேவர்கள் இறைவனைத் தொழுவார்கள். அர்ச்சனை செய்வார்கள். ஆனாலும் அவன் அவர்களை விடுத்து அரன் தன் உள்மனம் மகிழ்வது எவரிடம் என்று அறிவீரா? கண் போன்று அவனைக் கருத்தில் கொண்டு அவன் திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியவர்களிடமே! நாத வடிவாகிய இறைவன் தன் அன்பர்களின் அன்புக்கு ஆட்பட்டு அவர்களுக்கு அருளுடன் வெளிப்படுவான்.

#1506. நேசித்தவர் நினைவறியார்!

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம் பார்க்கின்
மாசற்ற சோதிமணி மிடற்ற ண்ணலை
நேசித்திருந்த நினைவறி யாரே.

பாசி படர்ந்த குளத்தில் ஒரு கல்லை வீசினால் பாசி விலகிக் குளம் சிறிது தெளியும். மீண்டும் பாசி மூடி விடும்.
அதுபோலவே இறைவனின் புகழை வாசித்தாலும், அவனை பூசித்தாலும், வாச மலர்களைக் கொய்திட்டாலும், மனம் சிறிது நேரம் மட்டுமே தெளிவடையும். மாசற்ற சோதியாகிய, மணி வண்ண மிடற்றினை உடைய, நீல கண்டப் பெருமானை நினைவில் நிறுத்திக் கொண்டவர் உலக நினைவு அற்றவர் ஆகிவிடுவார்.

Advertisements