#1507 to #1508

#1507. சரியை சாலோகம் தரும்!

சாலோகம் ஆதி, சரியாதி யின் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையாம்
மாலோகம் சேரின் வழியாகும், சாரூபம்
பா லோகம் இல்லாப் பரன்உரு ஆமே.

சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்பவை நன்கு வகை முக்தி நெறிகள் ஆகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவை நான்கும் அவற்றை அடையும் வழிகளாகும். சரியை என்னும் நன்னெறியைப் பின்பற்றுபவர் இறைவன் வாழும் உலகத்தை அடைவார். அவன் அருகில் விளங்குவார். அவன் வடிவையும், ஒளியையும் பெறுவார். இவர் சிவபெருமானுடன் லயம் அடையாமல், அவன் வடிவைப் பெற்று, அவன் உலகில், அவன் அருகில் வாழ்வார்.

#1508. நான்கு செயல்கள்

சமயங் கிரியையில் தன்மனம் கோவில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாம்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

சமயத்தைப் பற்றி நிற்பவர் இந்த நான்கு செயல்களைச் செய்ய வேண்டும்.

1. தான் வழிபடும் இறைவனைத் தன் மனக் கோவிலில் இருத்துவது முதல் செயல் ஆகும்.

2. இறைவனுக்கு உரிய மந்திரத்தை நினைப்பது சமயத்தில் விசேடம் ன்னும் இரண்டாவது செயல் ஆகும்.

3. மூல மந்திரத்தில் தெளிவு பெறுவது மூன்றாவது செயலாகிய நிர்வாண தீட்சை எனப்படும்.

4. இறைவனை எண்ணியபடி அவனுடன் சமாதியில் கூடுதல் சமயாபிடேகம் என்னும் நான்காவது நெறியாகும்.