#1510 & #1511

#1510. சாரூபம்

தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றிக் கைகூடா
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.

சாரூபம் என்னும் முக்தியை அட்டாங்க யோகத்தின் எட்டாவது உறுப்பாகிய சமாதியால் அடைய முடியும். ஞான நெறியைப் பற்றி நின்றவர்களே இதனை அடைய முடியும். இவர்களுக்குச் சித்தி கைகூடும் .யோகத்தால் இவர்களின் உடல் குற்றமற்றதாக மாற்றி அமைக்கப்படும்.

#1511. கயிலை இறைவனின் கதிர் வடிவம்

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகும் சராசரம் போலப்
பயிலும் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவனின் கதிர்வடி வாமே.

மேருமலையைச் சார்ந்த உடனேயே பொருட்கள் அனைத்தும் மேருவின் பொன்னிறத்தை அடைந்துவிடும். அதைப் போலவே அரனின் அன்பர்கள் அவன் நாதத் தத்துவத்தில் விளங்குகின்ற குரு மண்டலத்தை அடைந்தவுடனேயே கயிலை இறைவனின் கதிர் வடிவினைப் பெற்று விடுவர்.

Advertisements