#1530 to #1534

#1530. பாசத்தில் உற்று பதைப்பார்

ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா,
மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.

ஆறு விதமான சமயங்களும் நம் உடலினுள் உறையும் கடவுளைக் காண உதவுவதில்லை. அந்தச் சமயங்களைப் பின்பற்றுபவர்கள் மயக்கத்தைத் மாயக் குழியில் விழுவர். மனைவி, மக்கள் என்னும் பாசத்தில் கட்டுண்டு மனம் பதைபதைப்பர்.

#1531. உள்ளத்தே கரந்து நிற்பான்

உள்ளத்து உளே தான் கரந்து, எங்கும் நின்றவன்,
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்து அறியார்களே.

எங்கும் நிறைந்தவன் இறைவன். எனினும் ஒவ்வொரு உயிரின் உள்ளத்தில் உள்ளே ஒளிந்து மறைந்து உறைவான். அவன் ஒரு சிறந்த கொடை வள்ளல். சகசிரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரையில் சக்தியுடன் தானும் பொருந்தி நிற்பான். ஒன்பது வாயில்களைக் கொண்ட உடலில் புகுந்து கொண்டு மேல் நோக்கிச் செல்லும் அந்தக் கள்ளத் தலைவனின் செயல்முறைகளை இந்த உலகத்தவர் எவருமே அறிந்து கொள்ளவில்லை.

#1532. பற்றற்றவனைப் பற்றிடல் வேண்டும்!

உள்ளது முள்ளன் புறத்துள னென்பவர்க்கு
உள்ளது முள்ளன் புறத்துள னெம்மிறை
உள்ளது மில்லை புறத்தில்லை யென்பவர்க்கு
உள்ளது மில்லைப் புறத்தில்லை தானே.

உள்ளத்தில் உள்ளான் இறைவன் என்னும் அன்பரின் உள்ளத்தில் இருந்து அருள் புரிவான் இறைவன்.
புறத்தே இருந்து உயிர்களை நடத்துவான் இறைவன் என்ற பேதமான ஞானம் உடையவருக்கு அவரிலும் வேறாக நின்று அருள் புரிவான் இறைவன். உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களுக்கு அவன் இரண்டு இடங்களிலுமே இருப்பதில்லை.

#1533. தெளிந்த பின் மனை புகலாம்

ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனவன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின்
மாறுத லின்றி மனை புக லாமே.

ஆறு சமயங்களையும் உணர்ந்தவர் இறைவனை உண்மையாக உள்ளது உள்ளபடி அறிந்துகொண்டவர் அல்லர். ஆறு சமயங்கள் கூறும் முடிவான மெய்ப் பொருள் அவன் அல்ல என்பதும் மெய். எனவே நீங்கள் இறைவனைப் பற்றி நன்கு ஆராயுங்கள். ஆராய்ந்து தெளிவு பெறுங்கள். தெளிவு பெற்றால் வீடு பேற்றை மிக எளிதில் பெற்றுவிடலாம்.

#1534. நந்திதாள் சார்வது உய்விக்கும்

சிவம் அல்லது இல்லை, அறையே, சிவமாம்
தவம் அல்லது இல்லை, தலைப்படு வோர்க்கு இங்கு,
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்.
தவம் அல்ல, நந்திதாள் சார்ந்து உய்யும் நீரே.

சிவனை விடச் சிறந்த தெய்வம் என்று ஒன்று இல்லை. ஆன்மாவில் கரந்து மறைந்து உறையும் சிவனை அறிந்து கொள்வதே சிறந்த தவம் ஆகும். வேறு எதுவுமே தவம் அல்ல. இதை அறியாமல் ஆறு சமயங்களிலும் சிறப்பினை அடைய விரும்புபவர்களுக்கு அவை எல்லாம் வீணே. தவத்தின் பயனை அடையக் குரு மண்டலத்தில் விளங்கும் சிவத்தைக் கண்டு கொண்டு உய்வடைவீர்!

Advertisements