ஐந்தாம் தந்திரம்

1. ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

ஐங்கரன், ஆனைமுகன், இளம் பிறை போன்ற தந்தங்களை உடையவன்;
சிவன் மகன், ஞான வடிவானவன், அவன் திருவடிகளை வணங்குகின்றேன்

2. ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான் ; உணர்ந்து எட்டே.

ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை (அறம் பொருள் இன்பம் வீடு) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை ( மெய், கண், மூக்கு, வாய், செவி ) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.

3. கூற்றுதைத்தான் போற்றி!

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.

Advertisements