#1491 to #1494

#1491. யோகமும் போகமும் பொருந்தும்!

யோகமும் போகமும் யோகியார்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளதோர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியாம்
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

யோகம், போகம் இரண்டும் யோகியர்க்குப் பொருந்தும். யோகத்தினால் ஒரு யோகி சிவ சாரூப்யம் அடைவார். போகத்தால் புருடார்த்தங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் பெறுவார். இதனால் அழியாத யோகிக்கு யோகம், போகம் இரண்டுமே நன்றாகப் பொருந்தும்.

#1492. சக மார்க்கம் என்பது எது?

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ஒளி
போதாலயத்துப் புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சக மார்க்கமே.

குருவின் அருளால் ஞானம் பெற்றுச் சாதனை செய்வதால் நாடிகள் தூய்மை அடையும். அத்துவா சக்தி வந்து அமையும். மேதை முதலான பதினாறு கலைகளில் விளங்கும் வானமும் ஒலியும் நன்கு புலப்படும். அறிவின் ஆலயம் ஆகிய ஆன்மாவை, ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் கீழ் நோக்கி இழுக்கும் தம் இயல்பிலிருந்து மாறுபட்டு மேல் நோக்கிச் செலுத்தும் இயல்பை அடைவதே சகமார்க்கம் எனப்படும்.

#1493. சிவன் வந்து பொருந்துவான்

பிணங்கி நிற்கின்ற வைஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர்மன வாளால்,
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வனாக வல்லான் சிந்தை வந்து நின்றானே.

மாறுபட்டு நின்று ஆன்மாவைக் கீழ் நோக்கி இழுக்கின்ற ஐம்பொறிகளையும் மனம் என்னும் கூறிய வாளால் நான் வருத்தித் துன்புறுத்துவேன். அப்போது பதினெட்டுக் கணங்களும் வணங்குகின்ற, எல்லோரும் வணங்கத் தக்க இறைவன் ஆகிய சிவபெருமான் என் சிந்தையில் வந்து பொருந்தி நிற்பான்.
பதினெட்டுக் கணங்கள் :
அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பாசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர்.

#1494. உளங் கனிந்து நிற்பான்

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்,
உளங் கனிந்துள்ளம் ம் உகந்திருப்பார்க்கு
பழங் கனிந் துள்ளே பகுந்து நின்றானே.

நன்கு விளைந்த கனியினைப் போன்ற செம்மையாளர்களுக்கும், நல்ல ஒரு கனியினைப் போன்று இன்பம் தரும் உண்மைப் பொருள் இறைவனே ஆவான். இறைவன் கனியிலிருந்து சாற்றை வேறுபடுத்துவது போலவே , உள்ளம் கனிந்து உகந்து இருப்பவர்களைத் தத்துவங்களிலிருந்து வேறுபடுத்தி விடுவான். அதன் பிறகு தானும் அவர்களுடன் ஒன்றாகி விடுவான்.